தொ.அ ஈ கழகம் பற்றிய அறிமுகம்
தொழிலாளர் ஈட்டுறுதி கழகத்தால் (ESIC) நிர்வகிக்கப்படும் தொழிலாளர் ஈட்டுறுதி திட்டம் (தொ,அ,ஈ) இந்தியாவில் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார காப்பீட்டுத் திட்டமாகும். இது தொழிற்சார் நோய்கள், மகப்பேறு, இயலாமை அல்லது மரணம் ஏற்பட்டால் ஊழியர்களுக்கும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் நிதி மற்றும் மருத்துவ சலுகைகளை வழங்குகிறது. தொழிலாளர் அரசு ஈட்டுறுதி கழகம் என்பது தொழிலாளர் அரசு ஈட்டுறுதி சட்டம், 1948 இன் கீழ் நிறுவப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும்.
தமிழ்நாட்டில் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி திட்டம் காப்பீடு செய்யப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு விரிவான மருத்துவ சேவையை வழங்குகிறது, வழக்கமான பரிசோதனைகள் முதல் மருத்துவமனையில் அனுமதிப்பது வரை அனைத்தையும் உள்ளடக்கியது . காப்பீட்டாளர்கள் உடல்நலமின்மை, மகப்பேறு மற்றும் தற்காலிக இயலாமைக்கான தேவையான மருத்துவ கவனிப்பு மற்றும் நிதி உதவியைப் பெறுவதை உறுதி செய்வதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். தற்போது தமிழ்நாடு முழுவதும் 43.77 இலட்சம் தொழிலாளர்கள் மற்றும் 1.75 கோடி தொழிலாளர்களைச் சார்ந்தோர்கள் (அதாவது அவர்களது மனைவி, குழந்தைகள் மற்றும் தொழிலாளர்களின் பெற்றோர்) இத்திட்டத்தின் கீழ் உள்ளனர்.
தமிழ்நாட்டில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்தின் (தொ.அ.ஈ.) கட்டுப்பாட்டின் கீழ் 7 தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனைகளும், புதுதில்லி, தொழிலாளர் அரசு ஈட்டுறுதி கழக தலைமையகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் 3 தொழிலாளர் அரசு ஈட்டுறுதி கழக மருத்துவமனைகளும் மற்றும் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் 1 அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனை கோயம்புத்தூர் மூலம் காப்பீட்டு நபர்களுக்கும்ர்தம் குடும்ப உறுப்பினர்களுக்கும் மருத்துவ சிகிச்சை அளித்து வருகின்றன. மேலும் தமிழ்நாட்டில் 241 தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகங்கள் மூலமாக காப்பீட்டு நபர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகிறது.
தொழிலாளர் அரசு ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் காப்பீட்டு நபர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்த குடும்ப உறுப்பினர்களும் முதன்மை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை மருத்துவ சிகிச்சை பெற தகுதி உடையவராவர். மேலும் மருத்துவம், உடல் நலக்குறைவு, மகப்பேறு, இயலாமை, சார்ந்திருப்போருக்கான பலன்கள் மற்றும் இறுதிச்சடங்கிற்கான செலவுகளும் வழங்கப்படுகின்றன.
தமிழ்நாட்டில் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் காப்பீடு செய்யப்பட்ட நபர்களும் அவர்களது குடும்பத்தினரும் மருத்துவ சேவைகளைப் பெறுகின்றனர். மருத்துவ சிகிச்சைகள் தவிர, உடல்நலமின்மைக்கான உதவி, நீட்டிக்கப்பட்ட உடல்நலமின்மைக்கான உதவி, மேம்படுத்தப்பட்ட உடல்நலமின்மைக்கான உதவி, மகப்பேறு உதவி, சார்ந்திருப்போருக்கான உதவி, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி, வேலையின்மைக்கான உதவித் தொகை, நிரந்தர இயலாமைக்கான உதவி, இறுதிச் சடங்கு உதவி, முதியோர் மருத்துவ பராமரிப்பு, தனியார் மருத்துவமனைகளில் காப்பீடு செய்யப்பட்ட நபர்களால் ஏற்படும் மருத்துவச் செலவுகளுக்கான திருப்பிச் செலுத்துதல் ஆகியவையும் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி கழகத்தால் வழங்கப்படுகின்றன.